திருக்கோவில் - வரலாறு



மகா கும்பாபிசேகம் ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விளிம்பி வருடம் மாசி மாதம் 3 நாள் (15-02-2019) வெள்ளிக்கிழமை வளர்ப்பிறை ஏகாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மீனா லக்கினத்தில் மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுத ஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிசேகம் - கூனம்பட்டி ஆதின திருமடம் - வேள்வி திலகம் , சிவாகம , சிரோன்மணி , நல்வாக்கு நாயகர் சதகுரு ஸ்ரீ ல . ஸ்ரீ. ச. நடராஜ ஸ்வாமிகள் அவர்களின் அருளார்ந்த தலைமையிலும் ஸ்ரீமத் ஸ்வாமிநாத தம்பிரான் ஸ்வாமிகள் திருவாடுதுறை, --- ஆதின கட்டளை விசாரணை ஸ்ரீ தாயுமானஸ்வாமிகள் , ஆதின திருமடம் அன்னப்பன் பேட்டை தஞ்சாவூர் . மற்றும் திரு . சுப்புஸ்வாமி ஐயா - முருகன் அடிமை - சென்னிமலை. திரு. ஆறுமுகம் ஐயா -சிவனடியார் -சத்தியமங்கலம் , ஆகியோரது முன்னிலையிலும் , பொதுமக்கள் புடை சூழ மிக சிறப்பாக மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவிலின் தனி சிறப்புக்கள் * முருகப்பெருமான் மூன்று முகம், ஆறு கரங்களுடன், - தமது தேவியருடன் உள்ளார். * சிவபெருமான் கைலை நாதராக அருள் பாலிக்கிறார். * நவ கிரகங்கள் தனி தனி கோவில்களில் தமது தேவியர் மற்றும் வாகனங்களுடன் உள்ளனர். * நவ கிரக நாயகி - பகவதி அம்மன் வீற்று இருக்கின்றார். * பதினெட்டு சித்தர்களின் மகா சபை மற்றும் ஸ்ரீ சக்கரமான மகா மேரு அமைக்கப்பட்டுள்ளது. * சூரபத்மனை வதம் செய்த - சக்தி வேல் அமைய பெற்று இருக்கின்றது. திருக்கோவில் - வரலாறு தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் சாலையில் கோபியிலிருந்து மேற்கு 10கீ.மீ தொலைவிலும் சத்தியிலிருநது கிழக்கே 16வது கீ. மீ தொலைவிலும் தடப்பள்ளி எனும் கிராமம்.பவானி ஆற்றங்கரையில் மிகப் பழமையான நாகரிகம் கொண்ட ஒரு சிறிய ஊர் இருந்திருக்கிறது.இயற்கையின் சீற்றத்தாலும்,காலத்தின் கட்டாயத்தாலும் மெல்ல மெல்ல வடக்கு ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இடபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்து மணியகாரன்பாளையம் எனும் ஊரில் நிரந்தரமாக வாழத் தொடங்கினர்.இதற்கு சான்றாக திருநீற்று மேடு மற்றும் காந்தி நகரின் வடக்குப் பகுதியில் உள்ள தோட்டங்களிலும் பழைமையான முதுமக்கள் தாலி பல காணப்படுகிறது. இதன் கிழக்குப்பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளிலும் சுங்கத்து மேடு எனும் பகுதியிலும் பல முது மக்களின் தாலிகள் அகழ்ந்தேடுக்கப்பட்டுள்ளன. தற்போது மணியகாரன்பாளையம், பள்ளம்பாளையம் உள்ளடங்கியப் பகுதிகளின் மஜராவாக காசிபாளையம் ஊர் உள்ளது.இவ்வூரின் கிழக்கே சுமார் 1கீ. மீ தொலைவில் சத்தி-ஈரோடு நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் மூன்று சிறு சிறு குன்றுகள் கிழமேலாக வரிசையாக அமைந்துள்ளன. அதில் மேற்குப் பகுதியில் உள்ள் குன்றில் அருள் மிகு மாதேஸ்வரன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.கிழக்குப் பகுதியில் உள்ள குன்றில் மண்ணுலகில் காணாத அதிசயமாக மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய அருள் மிகு முருகப்பெருமான் ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி என்கிற திருப்பெயருடன் நின்று அருள்பாலித்து வருகிறார். இந்த கற்சிலையானது சுமார் 3 அடி உயரம் உள்ள கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கி.பி 11 ஆம் நூற்றாண்டில்தான் இவ்வாறான புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஸ்ரீ மூன்றுமுக முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு மற்றும் அபயம் அளிக்கும் நிலையிலும்,இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், அபயம் அளிக்கும் நிலையிலும், இடது கீழ் கரத்தில் வில் பின்புறம் அழகு மயிலும் காணப்படுகிறது. இவ்வாறு பழமையும் சிறப்பும் கொண்ட முருகப்பெருமானின் கோவில் மிகவும் சிறியதாகவும் சிதிலமடைந்து விட்டதாலும் அதை புதுப்பிக்க எண்ணிய ஆன்மிக சான்றோர்கள் கடந்த 18/02/2011-ம் ஆண்டு பாலாலயம் செய்து மேல்பகுதி மிகவும் குறுகியதாகவும் இடவசதி இல்லாமலும் இருந்த பழையக் கோவிலை எடுத்துவிட்டு புதிய கோவில் கட்ட ஆரம்பித்துள்ளனர். மேலும் கோவிலுக்கு செல்ல படிகள் இல்லாமலும் இருந்தது, தற்பொழுது கருவறை 6*6 அடி, அர்த்த மண்டபம் 8*6 அடி மற்றும் முன்புறம் மகாமண்டபம் 22*26 அடிகள் கொண்ட அளவுகளில் அமைக்கப்பட்டு உள்ளன. குன்றின் மேல் செல்ல படிக்கட்டுக்கள் கட்டப்பட்டு,வாகனங்கள் செல்லவும் சாலைவசதி அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் சுற்றுப்பிரகாரம் விரிவுபடுத்தப்பட்டு தேர் சுற்றி வருவதற்கு ஏதுவாக அகலப்படுத்தப்படுகிறது. கருவறையின் மீது இரண்டு நிலை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது கன்னிமூலை கணபதிக்கும், கைலை நாதருக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் திருத்தலத்தில் ஒரு சிறப்பாக நவகிரகங்கள் தேவியருடன் தனித்தனி கோவில்களில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். கோவிலின் பின்புறம் - ஸ்ரீ சக்கரத்தின் மீது மகா மேரு அமைக்கப்பட்டு , சித்தர்கள் சூழ மகா சபை உள்ளது. இங்கு முருக பெருமான் சிவ குரு நாதராக தவ கோலத்தில் வீற்று அருள் பாலிக்கின்றார். இச்சிறப்பு வட தமிழ்நாட்டில் எங்கும் அமையாத சிறப்பாகும். கோவிலின் முன்பு படிப்பிள்ளையார் எழுந்தருளிகிறார். மேலும் மகாமண்டபத்தின் முன்பு இடும்பர்,கடம்பர் சிலைகளும் ,கோவிலின் திருப்பணிகள் ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி திருக்கோவில் அறக்கட்டளை என்ற அமைப்பால் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.முருகன் நாமத்தை ஒம் சரவணபவ என முழங்கி முக்காலமும்,தொழுவோர்க்கு இம்மையில் துன்பம் இல்லை,வறுமையில்லை,நோய் நொடியில்லை.மூன்றுமுக முருகனின் திருவருள் பெற்றீட,நடைபெற்று வருகின்ற திருப்பணிக்கு மனமுவந்து நன்கொடையை பொருளாகவோ, பொன்னாகவோ வாரி வாரி வழங்கி தங்களை இந்த ஆன்மீக திருப்பணியில் பங்கேற்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமியின் நல்லருள் பெற பக்தகோடிகளை கரம் கூப்பி அழைக்கிறோம்.

 

All Rights Reserved. © Copyright 2017 -மூன்று முகம் ஸ்ரீ முத்துவேலாயுதசுவாமி திருக்கோவில்